சம்பந்தன் குழுவிடம் மைத்திரி வழங்கிய புதிய வாக்குறுதி!

Report Print Rakesh in அரசியல்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வைப் பெற்றுத் தருவேன்.

அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மாலை நேரடிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது வெறுமனே சட்டரீதியாக நோக்கப்படலாகாது எனவும், இது ஓர் அரசியல் பிரச்சினையாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1970ஆம் ஆண்டுகளில் மக்கள் விடுதலை முன்னணியினரின் போராட்டங்களை எடுத்துரைத்த இரா.சம்பந்தன், அவர்கள் தொடர்பில் ஓர் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டது போல இந்த விடயமும் நோக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலை முயற்சியின் சந்தேகநபரை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்ததை எடுத்துக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர், இந்தக் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை ஜனாதிபதிக்கு முன்மொழிய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பல வருடங்களாக சிறைகளில் வாடும் இந்தக் கைதிகளின் மனைவிமார், குழந்தைகளின் பரிதாபமான நிலைமையை விளக்கிக் கூறிய இரா.சம்பந்தன், கலாதாமதம் இல்லாமல் இந்தக் கருமங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வேண்டிக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, பல நாடுகளில் இப்படியான பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன எனவும், இந்தக் கைதிகள் விடயத்திலும் அவ்வாறான முடிவு எட்டப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு இன்னும் இரண்டு வாரங்களில் தேசிய பாதுகாப்பு சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருடன் கலந்துரையாடி ஒரு தீர்வைப் பெற்று தருவதாகவும் உறுதியளித்தார். அது ஓர் அரசியல் தீர்மானமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.

Latest Offers