பிரதமராக யாரை நியமிப்பது என்பதை ஜனாதிபதியே தீர்மானிப்பார்!

Report Print Mubarak in அரசியல்

உறுதியான அரசாங்கமொன்றினை அமைக்க பிரதான இரு கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில், யாரை பிரதமராக நியமிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்திருந்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அரசியல் மாற்றத்தினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமையானது அரசியலில் பெரும் பிரச்சினைக்குரிய விடயமாக மாறியுள்ளது.

இந்த தீர்மானம் வேறு எந்தவொரு தனிப்பட்ட சொந்தப் பிரச்சினைகளுக்காகவும் எட்டப்பட்டது அல்ல. முற்றுமுழுதாக நாட்டின் நன்மை கருதியே குறித்த தீர்மானம் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை நாட்டையும், மக்களையும், தேசிய சொத்துக்களையும் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த வளம் பொருந்தியதொரு நாட்டை கையளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறிப்பாக, இன்று அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆட்சியிலுள்ள எமது அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை.

இந்நிலையில், எதிர்கட்சிகள் இணைந்து அரசுக்கு எதிராக சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளன.

உண்மையில் இவ்வாண்டு இறுதியை நோக்கி நகரும் இந்த வேளையில் நாங்கள் பல்வேறுபட்ட தேவைகளுக்காகவும், குறைநிறப்பு திட்டங்களுக்காகவும் நாடாளுமன்றத்தை அனுக வேண்டிய தேவை எமக்குள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கை இதுவரையில் சமர்ப்பிக்கப்படாத நிலையில் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் எந்தவிதமான பணத்தையும் யாருக்காகவும் அரசாங்கம் செலவு செய்ய முடியாது. ஆனால், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை எமக்கு செலவு செய்யும் அதிகாரம் இருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை சமர்ப்பித்து எமது நிர்வாகங்களை முடக்கலாம் என்று எதிர்கட்சிகள் நினைக்கின்றன. அது சட்டரீதியான ஒரு செயல் அல்ல. இந்த அரசாங்கத்தையும், அமைச்சர்களையும் நாடாளுமன்றம் ஏற்கனவே அங்கீகரித்துள்ளது.

அவ்வாறே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கு விரோதமான எந்தவொரு செயற்பாட்டையும் செய்யவில்லை. அதற்கு அவர் ஒருபோதும் ஆயத்தமாக இருக்கவும் இல்லை.

இந்த நாட்டை சிறந்ததொரு பிரதமரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தேவையாக இருந்தது. இதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற பல கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரை பிரதமராக நியமித்து கடந்த 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமுல்படுத்தினால் அதற்கான ஒத்துழைப்புக்களை தமது கட்சி வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

எனவே, ஜக்கிய தேசிய கட்சியிலிருந்து எவரேனும் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஜக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கின்ற வேளையில் ரணில் விக்கிரசிங்கவை பிரதமராக்குவதற்காக 113 ஆசனங்களை அவர் பெற்றிருக்கவில்லை.

எதிர்கட்சியிலிருந்து ஒரு சிலரே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு விரும்புகின்றனரே தவிர எழுத்து மூலமாக இதுவரையில் அதற்காக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.

100 பேர் மாத்திரமே ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள். அதேவேளை, 103 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இருக்கின்றார்கள்.

ஆகவே, மஹிந்த ராஜபக்ஷவை விட 113 ஆசனங்களை ஒருவர் பெற்றுக்கொள்வாராக இருந்தால் அவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தயாராகவே உள்ளார்.

அத்துடன், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமையால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வாபஸ் பெறலாமா என்றும் அல்லது நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதா என்பது தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையில் நாம் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம். விரைவில் இது குறித்து நல்லதொரு தீர்மானத்தை எட்டவுள்ளோம்.

யாரை பிரதமராக நியமிப்பது என்று கூறமுடியாது அந்த தீர்மானத்தை ஜனாதிபதியே எடுக்கவேண்டும். வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தை கொண்டு இந்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

இது ஜனநாயக நாடு ஆகும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது, எந்த சர்வதேச நாடுகளும் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அவ்வாறான ஒரு நிலைக்கு நாங்கள் ஒருபோதும்அஞ்சப்போவதில்லையென்பதை ஜனாதிபதியின் சார்பில் இங்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வவுணதீவில் இடம்பெற்ற சம்பவம் பாரதூரமான சம்பவமாக கருதப்படுகின்றது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும்கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் அபகரிக்கப்பட்ட சம்பவமானது யுத்ததிற்கு பின்னர் இடம்பெற்ற முதலாவது பயங்கரவாத சம்பவமாக நாங்கள் கருதுகின்றோம்.

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி அவர்கள் வடகிழக்கு ஜனாதிபதி செயலணியை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையானபங்களிப்புடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பல இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சகல இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிரந்தர தீர்வினை பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிரஆயுதரீதியாகவோ, படுகொலைகள் ஊடாகவோ, அல்லது இனமுரண்பாடு ஊடாகவோ எதனையும் அடையமுடியாது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Latest Offers