ஜனாதிபதிக்கு அந்த அதிகாரம் கிடையாது! மைத்திரிக்கு ஐ.தே.க பதிலடி

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்தமத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டியில் மகாசங்கத்தினரை இன்று சந்தித்தித்து, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள அணியே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். இந்நிலையில், பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.

பெரும்பான்மைக்கு இடமளித்தால் மாத்திரமே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

இந்நிலையில், ஜனாநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதியை மகாசங்கத்தினர் வலியுறுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணிலை ஒருபோதும் பிரதமராக நியமிக்க போவதில்லை என கூறிவருகின்றார்.

இவ்வாறான நிலையிலேயே, பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்தமத்தும பண்டார தெரிவித்துள்ளார்.