கருணா மற்றும் பிள்ளையானை இணைத்துக்கொண்டமை புலிகளை வீழ்த்துவதற்கான ஒரு போர் வியூகம்!

Report Print Murali Murali in அரசியல்

மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த தடையேற்படுத்தியமையின் காரணமாகவே வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணையுடனனேயே மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும், இம்முறை அதற்கு தடை ஏற்பட்டமையினாலேயே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்று கூட்டமைப்பினர் விடுதலை செய்ய கோரும் அரசியல் கைதிகள் மிகவும் ஆபத்தானவர்கள். யுத்த காலப்பகுதியில் இறுதி வரை ஆயுதம் ஏந்தி படையினரை கொலைசெய்தவர்கள்.

எனவே அவர்களை விடுதலை செய்வது மிகவும் ஆபத்தானது. கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்தி போராடிய கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர் ஜனநாயக வழிக்கு மாறினர்.

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க கருணா மற்றும் பிள்ளையான் உதவினார்கள். இருவரையும் மகிந்த ராஜபக்ச இணைத்துக்கொண்டமையானது ஒரு போர் வியூகம்.

அவர்கள் எங்களோடு இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட்டனர். எனினும், கூட்டமைப்பினர் விடுதலை செய்ய கோரும் நபர்கள் இந்த நாட்டிற்கு ஆபத்தானவர்கள்.

போர் காலத்தில் இறுதி வரை ஆயுதம் ஏந்தி இராணுவத்தினரை அழித்த அவர்களை விடுதலை செய்வது மிகவும் ஆபத்தானது” என அவர் மேலும் கூறியுள்ளார்.