மீண்டும் சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்! சட்டமா அதிபருடன் ஜனாதிபதி அவசர பேச்சு

Report Print Murali Murali in அரசியல்

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தித்துள்ள நிலையில், ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைள் குறித்து சட்டமா அதிபருடன் இன்று இரவு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும், நாளை காலை எட்டு மணிக்கு மகிந்த ராஜபக்ச சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

அத்துடன், நாடாளுமன்றை கலைத்து பொது தேர்தலுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

இதனையடுத்து, நாடாளுமன்றம் கூடிய போது பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்து.

எனினும், ஜனாதிபதி அதனை நிராகரித்திருந்த நிலையில், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்களுக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்தித்துள்ளது.

இந்நிலையிலேயே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி, சட்டமா அதிபருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.