நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் மைத்திரிக்கு ஏற்படும் ஆபத்து! குடியுரிமை பறிபோகும் அபாயம்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை பறிக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டரசாங்கத்திலிருந்து விலகி, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவையும் அமைச்சரவையையும் கலைத்தார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கியிருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் அரசியல் களம் சூடு பிடித்ததுடன், நாட்டின் இயங்கு நிலையும் மந்த கதியடைந்தது. பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது.

இதற்கிடையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை காட்டத் தவறும் நிலை உருவாகியதையடுத்து நாடாளுமன்றத்தை தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி கலைத்து, பொதுத் தேர்தலை அறிவித்தார்.

எனினும், ஜனாதிபதியின் இச்செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதேபோன்று, மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் இயங்குவதற்கும் மேல் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பான வழக்குகள் வாதத்துக்கு வந்திருக்கின்றன.

இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி முன்னெடுத்த அரசியல் மாற்றத்துடன் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்த மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய விஜித ஹேரத்,

உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினை வழங்கும் பட்சத்தில் அவர் குற்றவாளி என்பது சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இதனையடுத்து ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை மட்டுமல்ல அவரது குடியுரிமையை பறிக்க முடியும். அவர் செய்துள்ள தவறு சாதரணமானது அல்ல. அதனால் தான் ஜனாதிபதி அச்சத்தில் தடுமாறுகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டுமொரு பிரேரணையை கொண்டுவந்துள்ளனர். இதில் முதல் சரத்து நீக்கபட்டுள்ளது. இதனை எவ்வாறு நீக்க முடியும்? இவர்கள் டீல் ஒன்றினை போட்டுவிட்டனர்.

ஜனாதிபதியின் கதைக்கு இணைங்கி இவர்கள் இதனை செய்துள்ளார்கள். அவ்வாறு இவர்களால் அதனை செய்ய முடியாது. ஜனாதிபதி இப்பொழுது குற்றவாளியாகிவிட்டார்.

இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியுடன் டீல் போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர். அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் இன்று மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தவர் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே.

நிறைவேற்று அதிகார நாற்காலியில் மைத்திரி மட்டுமல்ல ரணில் விக்கிரமசிங்க அமர்ந்தாலும் நாட்டினை நாசமாக்குவார்கள் என்றும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers