அபாய கட்டத்தில் இலங்கை! அமெரிக்கா அவசர எச்சரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

இலங்கையில் நிலவி வரும் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பொறுப்புணர்ச்சியுடனும், துரித கதியிலும் நாட்டில் நிலவி வரும் குழப்ப நிலைமைகளுக்கு அரசியல் தலைமைகள் தீர்வு காண முனைப்பு காட்ட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா இலங்கையின் எந்தவொரு அரசியல் தரப்பிற்காகவும் குரல் கொடுக்கவில்லை எனவும், குழப்ப நிலைமைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நோக்கமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் நெருக்கடி நிலைமைகளினால், சர்வதேச நாடுகளின் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், நாட்டில் சமூகப் பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வெளிப்படைத்தன்மையுடன் சட்ட ரீதியான ஓர் அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அரசியல் போட்டியில் எந்தவொரு தரப்பினையும் ஆதரிக்கவில்லை என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்ப நிலைமைகளினால் நாட்டுக்கு பாரியளவில் பொருளாதார பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் முதலீட்டாளர்கள் அபிவிருத்தி பங்குதாரர்கள் போன்றோரின் நன் மதிப்பினை மீளப் பெற்றுக் கொள்வதற்கு சில காலங்கள் காத்திருக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் இறைமைக்குள் அமெரிக்கா தலையீடு செய்யப் போவதில்லை எனவும், ஜனநாயக விழுமியங்களை மதித்து செயற்பட வேண்டியது அரசியல் தலைமைகளின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest Offers