உலக வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான அரசியல் சூழ்ச்சி காரணமாக இலங்கையின் வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் மட்டுமல்லாது ஜனநாயக உலகில் அரசாங்கம் இல்லாத முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மங்கள சமரவீர நேற்று வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

ஆசியாவில் மிகவும் பழமையான ஜனநாயக நாடான இலங்கை துரிதமாக சர்வாதிகார நாடாக மாறி வருகிறது. இதற்கு முற்றாக ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்புக் கூற வேண்டும்.

அவர் வழங்கிய வாக்குறுதியை மிக மோசமான முறையில் மீறியுள்ளார். இதனால், அவருக்கு எதிராக அரசியல் குற்றப் பிரேரணை மூலம் மட்டுமல்லாது நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழும் தண்டனை வழங்க முடியும்.

அரசாங்கம் ஒன்று இல்லாததை ஜனாதிபதி மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார். கடந்த 4 ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் மக்களை தவறாக வழி நடத்தும் நோக்கில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி தனது அறிவின்மை மற்றும் அறியாமையை உலகத்திற்கு எடுத்துக்காட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி சூழ்ச்சி மூலம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நியமித்த பிரதமர் உட்பட அமைச்சரவை செயற்பட கடந்த 3 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது.

தடைவிதித்து 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலைமையில், இலங்கை சுதந்திர வரலாற்றில் மட்டுமல்ல ஜனநாயக உலகில் அரசாங்கம் ஒன்று இல்லாத முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது எனவும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers