நாட்டில் நடைபெற்ற திடீர் ஆட்சி மாற்றம் சம்பந்தமாக ஆணைக்குழு ஒன்றின் ஊடாக விசாரணை நடத்த வேண்டும் என்ற மக்கள் விடுதலை முன்னணியின் யோசனையை தாமும் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பிரதமர் மற்றும் சட்டவிரோத அமைச்சரவையை நியமித்து நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ளியமைக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணைக்குழு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளியாகும் விடயங்களை அரசியல் விஞ்ஞானத்தின் கீழ் துறைகளுக்கும், பரிந்துரைகளுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இரகசியமான உடன்பாடு என்ன என்பதை கேட்டறிய வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இரகசிய உடன்பாடுகளை கொண்டுள்ள கூட்டணி கட்சி எனவும் அவர் கூறியுள்ளார்.