மகிந்த ராஜபக்சவின் மேன்முறையீட்டை விசாரிக்க நீதியரசர்கள் இல்லை! இதன் பின்னணியிலும் மைத்திரி

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பணிகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தரப்பினர் நேற்று உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர்.

இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரிக்க இன்னும் திகதி ஒதுக்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை அறிவித்து, ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய கோரி, தொடரப்பட்டுள்ள வழக்கு தற்போது விசாரிக்கப்பட்டு வருவதுடன் 7 நீதியரசர்கள் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை நாளைய தினமும் நடைபெறவுள்ளது.

இந்த வழக்கு நாளைய தினம் விசாரித்து முடித்த பின்னரே மகிந்த ராஜபக்ச தரப்பினர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்படும்.

இலங்கையின் உயர் நீதிமன்றம் பிரதம நீதியரசருடன் மொத்தமாக 11 நீதியரசர்களை கொண்டிருக்கும். எனினும் தற்போது 9 நீதியரசர்கள் மட்டுமே இருக்கின்றனர். நீதியரசர் ஈவா வனசுந்திர விரைவில் ஓய்வுபெறவுள்ளார். இதனால், அவர் வழக்கு விசாரணைகளை தவிர்த்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இதனடிப்படையில் தற்போது ஒரு நீதியரசர் மாத்திரமே எஞ்சியிருக்கின்றார். இதன் காரணமாக மகிந்த ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். அந்த நியமனங்களுக்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற அரசியலமைப்பு பேரவை வழங்கும். வெற்றிடமாக இருக்கும் இரண்டு நீதியரசர்கள் பதவிகளுக்கு துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோரை நியமிக்குமாறுஅரசியலமைப்பு பேரவை, கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.

பரிந்துரைத்து சுமார் ஒன்றரை மாதங்கள் கடந்தும், ஜனாதிபதி, நீதியரசர்கள் பதவிப் பிரமாணம் செய்வது தாமதித்து வருகிறார். அவர்கள் பதவிப் பிரமாணம் செய்திருந்தால், மகிந்த ராஜபக்ச தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருக்கும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, அரசியலமைப்பு நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியின் பணிகள் அதிகரித்து இருக்கும், இதன் காரணமாகவே பதவிப் பிரமாணம் செய்து வைக்க அவரால் நேரத்தை ஒதுக்க முடியாது இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

எது எப்படி இருந்த போதிலும் நாட்டில் நிலவும் நெருக்கடியில் நீதிமன்றங்கள் குறிப்பாக உயர் நீதிமன்றம் மிகவும் தீர்மானகரமானது. அரசியலமைப்பு பேரவை பரிந்துரைத்தும், ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பது சிக்கலுக்குரியது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest Offers