மக்களின் அரசுரிமை அதிகாரத்திற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் - உயர் நீதிமன்றத்தில் வாதம்

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டிற்குள் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகாண நீதிமன்றம் வழங்கக் கூடிய சிறந்த தீர்வு மக்கள் தமது அரசுரிமை அதிகாரத்திற்கு அமைய செயற்பட சந்தர்ப்பத்தை வழங்குவதாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கலைத்து, தேர்தலை அறிவித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் அமர்வு முன் இன்று மூன்றாது நாளாகவும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் இடைநிலை மனுவை தாக்கல் செய்திருந்த பேராசிரியர் ஜகத் வெள்ளவத்த சார்பில் சட்டத்தரணி அலி சப்ரி ஆஜரானார்.

தொடர்ந்தும் வாதங்களை முன்வைத்த அவர், இப்படியான அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டால், தமது அரசுரிமை அதிகாரத்திற்கு அமைய செயற்பட மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

இதனால், ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு தீர்வை வழங்கவேண்டும் என்று நாங்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பிரதிவாதிகள் தரப்பும் வாக்களித்துள்ளனர்.

இவ்வாறான அரசியலமைப்பு நெருக்கடிக்கு சமமான நெருக்கடி இந்தியாவில் ஏற்பட்டது. அப்போது அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை ஒன்றை நிறைவேற்றி, ஜனாதிபதி ஊடாக நாடாளுமன்றத்தை கலைத்த பின்னர் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கு அமைய நீதிமன்றம் இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

தேர்தலுக்கு அஞ்சுவோரே தேர்தலுக்கு செல்ல தேவை என்று கூறுகின்றனர். அதேபோல் மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லாதவர்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இடைநிலை மனுதாரர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவும் உதய கம்மன்பில சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹார டி சில்வாவும் ஆஜராகியிருந்தனர்.

எது எப்படி இருந்த போதிலும் உயர் நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தனது தீர்ப்பை வழங்கக் கூடும். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகம் தொடர்பில் முழு சர்வதேச நாடுகளும் கவனம் செலுத்தியுள்ள நிலைமையில், இந்த வழக்கு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பாக அமையும்.

அத்துடன் இந்த தீர்ப்பு இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்ப்பாகவும் இருக்கும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலேயே இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் அணுகுமுறையும் தீர்மானிக்கப்படும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest Offers