முன்னாள் போராளிகள் அச்ச நிலையில்! சிவமோகன்

Report Print Theesan in அரசியல்

வவுனியாவில் முன்னாள் போராளிகள் அச்சத்துடனையே காணப்படுகின்றனர் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்திலிருந்து எங்களது போராட்ட தமிழர்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்காக சிலர் செயல்படுகிறார்களோ என்று என்னுடைய அச்சத்தை தெரிவித்திருந்தேன்.

பலர் பணத்தை வெளியிலே இருந்து கொடுத்து அவரவர் இடத்தில் சில நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். இவை அனைத்தையும் அலசி ஆராயப்பட வேண்டியவை. தங்களிடையே ஒரு சுமூகமான நிலையில் வாழும் ஒரு போராளிகளை இன்று ஒரு அச்ச நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது வெளிப்படையான உண்மை.

அரசியல் கைதிகள் தொடர்பில் ஜேவிபியினருக்கு எப்படி ஒரு மன்னிப்பை கொடுத்தார்களோ, அதேபோன்று இந்த அரசியல் கைதிகளுக்கும் ஒரு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும். அதனை அரசியல் ரீதியில் தான் அணுக வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இந்த விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தீர்வை எட்ட முடியாத விடயம். காணி விடுப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரேரணைகள் பெருந்தொகையில் இருக்கின்றன. ஆயிரக்கணக்கான காணி சொந்தக்காரர்கள் ஒன்றாக்கப்பட்டு போராப்பட்டிருக்கிறது.

அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்தது. தமிழ், முஸ்லிம் மக்கள் கொடுத்த ஆதரவினால் தான் மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கிறார். அதனை நாம் அவருக்கு சுட்டி காட்டியுள்ளோம்.

அவர் எப்படி வந்தவர் என்பதை சுட்டி காட்டியுள்ளோம். எனவே ஜனாதிபதி இருக்கும் இந்த கால கட்டத்தில் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தெளிவாக சொல்லியிருக்கிறோம்.

அவருடைய இன்றைய செயற்பாடுகள் மீண்டும் ஓரு தடவை ஜனாதிபதியாக வருவதற்கான நகர்வாகவே பார்க்கப்படுகிறது. அதற்காக தான் இந்த அரசியல் நாடகங்கள்

அரங்கேறியிருக்கின்றது.

ஆகவே அப்படி ஓரு எண்ணத்தில் இருப்பவர் அரசியல் கைதிகளை விடுப்பதால் தனது வாக்கு வங்கி கூடும் என சிந்தித்தால் அதனை செய்வார் எனக் கருதுகின்றேன். அத்துடன், 1948ஆம் ஆண்டின் இன் பின் ஒரு பிரிவு தமிழ் மக்களுக்கான தீர்வை கொண்டு வந்தால் இன்னொரு பிரிவு அதனை தட்டிவிட்டதாகத் தான் வரலாறுகள் சொல்லியிருக்கின்றது.

மாறி மாறி அது நடந்துள்ளன. பேரினவாத கட்சிகள் இரண்டு பிரிவினரே. அவர்கள் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களது தீர்வை ஏற்றுக் கொண்டதாகவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் சரி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் சரி இரண்டும் ஒன்றும் தான்.

எமது போராட்டத்தில் சிலரை பிரித்தெடுத்து குழப்பி விட்டதாக சொல்கின்றோம். அது நாங்களே எங்களை குழப்பி நாங்களே பிரிந்து நின்று கொண்டு இன்னொரு கட்சி தான் பிரித்தார் என்று சொல்வதை விட அது நாங்கள் விட்டதாக தவறாகவே பார்க்க வேண்டும்.

இன்றும் அதேபோல் தமிழர்கள் ஒற்றுமையாக ஓரே கொள்கைகளுடன் நாங்கள் இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். தமிழினம் இருக்கும் வரை அவர்களிடம் இருந்து அந்த போராட்ட குணம் இல்லாமல் போகப்போவதில்லை.

இன்று அவர்களிடம் இருந்து போராட்ட குணத்தை இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் வெளிநாடுகள், உள்நாடுகள், புலனாய்வாளர்கள், இராணுவம் என பல தரப்பாலும் முன்னெடுக்கப்படுகினது. மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ள புலனாய்வாளர்களிடம் இருந்து அவர்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களது செயற்பாடுகளை மக்கள் மூலம் இங்கு முன்னெடுக்கிறார்கள்.

தன்னிச்சையாக முன்னெடுக்கின்றார்கள். அரசியல்வாதிகள் வேண்டாம் என முன்னெடுக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உள்ளெடுக்க வேண்டாம் என்று சொல்லி முன்னெடுக்கிறார்கள்.

அவை ஆராயப்பட வேண்டும். தமிழ் மக்கள் மனதில் வைத்து அப்படியானவர்கள் யார் என்பதை அடையாளம் காண வேண்டும். அவர்கள் உள்ளே இருக்கின்ற சுமுகமான நிலையைக் கூட உருக்குலைக்கின்றார்களோ என்று எண்ண தோன்றுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers