நீதிமன்றத்தினூடாக புதிய அரசாங்கமா?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாளுக்கு நாள் இலங்கை அரசியல் நிலை குழப்பமடைந்து செல்கின்றமையினால் சர்வதேச ரீதியில் இலங்கை பெற்றிருந்த நன்மதிப்பு குறைவடைந்து செல்கின்றதுடன், சர்வதேச அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், அந்நிய முதலீடுகளும் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் மிகமிக மோசமடைந்து செல்வதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் தமது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எனினும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கேட்டாலும் பிரதமராக ரணிலை நியமிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இதற்கிடையில் இந்த மாதம் 7ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு தடைவிதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் விவாதத்தில் இருக்கின்றன.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, நீதிமன்றத் தீர்ப்புடன் பெரும்பான்மையை நிரூபித்து, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டில் அரசியல் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கிறது. நாம் எடுத்தத் தீர்மானமும் நாளுக்கு நாள் பலமடைந்துக் கொண்டு வருகிறது.

நீதிமன்றத் தீர்ப்புடன் பெரும்பான்மையை நிரூபித்து, புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என நினைக்கிறோம். நாம், தேர்தலுக்கு செல்ல ஒருபோதும் தயங்கியதில்லை. ஆனால், அனைத்தும் சட்டரீதியாகவும் அரசமைப்புக்கும் உட்பட்டு இடம்பெற வேண்டும் என்றே நினைக்கிறோம்.

சபாநாயகரின் கதிரையில் சென்று ஒரு குழு அமர்ந்து கொண்டு, காட்டு மிராண்டித் தனமாக செயற்படுவதாயின், எதற்கு நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது? அவர்கள் நாடாளுமன்றில் அமைதியில்லை எனவே, தேர்தலை நடத்துமாறும் கோருகிறார்கள். இதற்காகவா மக்கள் ஆணை வழங்கினார்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இரண்டு முறை நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணியினர் பெரும்பான்மையை நிரூபித்தும் ஜனாதிபதி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு ஜனாதிபதிக்கு எதிராக வருமாயின், நீதிமன்றத்தின் ஊடாகவே புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்கக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.