சபாநாயகரின் செயலுக்கு மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!

Report Print Murali Murali in அரசியல்

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் ஒழுங்குப் பத்திரத்துக்கும் முரணான வகையில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை வழிநடத்திச் சென்றமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அந்த கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து சபாநாயகர் ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டதற்கு அமைய சபையை வழிநடத்தத் தொடங்கினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று நாடாளுமன்றம் கூடியது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களை நியமிப்பது குறித்த பிரேரணையை வாபஸ் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க அறிவித்ததைத் தொடர்ந்து, சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்பட வேண்டும் என சபாநாயகர் அறிவித்தார்.

எனினும், சபை ஒத்திவைக்கப்படாத நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக் கூறத் தொடங்கினர்.

முதன் முதலில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல சபாநாயகரைப் பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து ஐ.தே.க உறுப்பினர் ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினர். நாடாளுமன்ற அமர்வுகளை நேரடியாக ஒலிபரப்புச் செய்யும் அரசாங்க வானொலி ஒப்பந்தத்தை மீறிச் செயற்படுவதாக சிலர் குற்றஞ்சாட்டினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றினார். ஒவ்வொருவராக எழுந்து கருத்துக்க ளைக் கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அனைவருக்கும் சபாநாயகர் இடமளித்துக் கொண்டிருந்தார். சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக ஒவ்வொருவரும் கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தனர்.

இதன்போது சபைக்கு வெளியேயிருந்து நுழைந்த அநுர குமார திசாநாயக்க, சபைக்குள் இருந்த தமது கட்சி உறுப்பினர்களிடம் சபாநாயகரின் செயற்பாடு குறித்து விசனத்தை வெளிப்படுத்தினார்.

அதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், சபை ஒத்திவைக்கப்பட்டு ஒத்திவைப்புப் பிரேரணை முன்னெடுக்கப்படவேண்டிய நிலையில், ஒவ்வொருவரும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி உரையாற்றி வருகின்றனர்.

நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கமைய இதற்கு இடமளிக்க வேண்டாம் என கடுமையான தொனியில் கேட்டுக் கொண்டார். எனினும், மேலும் மூன்று நான்கு பேர் கருத்துத் தெரிவிக்கவேண்டியிருப்பதாக சபாநாயகர் கூறினார்.

இருந்தாலும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியில் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.

Latest Offers