பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இலங்கை வரவுள்ளதாக தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினை தொடரும் நிலையில் பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயத் துறை அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமது பயணம் நிகழவுள்ளதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் மார்க் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் கீத் வாஸினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின்போதே இந்த தகவலை பீல்ட் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தொடர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை தமது நாடு வலியுறுத்தி வருவதாக அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய பிரச்சினை தொடர்பில் கடந்த 3ஆம் திகதி பிரித்தானியாவில் உள்ள தமிழ் பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாடியதாகவும் பீல்ட் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை, ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஏற்றுக்கொண்ட மனித உரிமை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை பிரித்தானியா தொடர்ந்தும் வலியுறுத்துவதாகவும் பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers