ஜனாதிபதியால் இரணைமடு குளம் திறப்பு! மக்களோடு நின்ற சிறீதரன்

Report Print Dias Dias in அரசியல்

கிளிநொச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இரணைமடுக் குளத்தின் வான்கதவு திறந்து வைக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மக்களோடு மக்களாக நின்று கலந்து கொண்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பாரிய நிதி ஒதுக்கீட்டில் மீள புனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாணத்தில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த இரணைமடுக் குளத்தின் வான்கதவு திறப்பு நிகழ்வில் பெருமளவிலான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தபோதிலும், அப்பகுதியினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த எந்தவொரு அரசியல் பிரமுகரும் கலந்து கொள்ளவில்லை.

எனினும், பொதுமக்களோடு பொதுமகனாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற வகையிலும், அந்த பகுதியை மக்கள் பிரதிநிதி என்ற வகையிலும் அங்கிருக்கும் பிரதேச மக்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நிகழ்வில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இந்த விழாவின்போது கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் என பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிகழ்விற்காக அமைக்கப்பட்டிருந்த பிரத்தியேக மேடையில் இருந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பொதுமக்களுடன் இணைந்து குளம் திறந்து வைக்கப்பட்டதை பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.

Latest Offers