தேசிய வளங்கள், தேசிய பணத்தை மோசடி செய்தவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வர தேசிய அரசாங்கத்திற்கு உறுதியிருக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.
விகாரமஹாதேவி வெளியரங்கில் நேற்று நடைபெற்ற சட்டத்தின் குரல் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதிக்கோ, தேசிய அரசாங்கத்தை அமைத்த ஐக்கிய தேசியக்கட்சிக்கோ அரசியல் விளையாட்டை நடத்த நாட்டு மக்கள் அன்று ஆணையை வழங்கவில்லை.
மைத்திரிபால சிறிசேன, தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்களில் மீறினார். கட்சி சாரா ஜனாதிபதியாக செயற்படுவேன் என்று கூறிய அவர், பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தனது பலத்தை உறுதிப்படுத்த செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தனக்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி முன்னர் இருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் மற்றும் பொலிஸ் விசாரணைகளை தாமதப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையீடுகளை மேற்கொண்டார்.
எவ்வாறாயினும் தற்போது நாட்டில் உள்ள நீதிமன்றத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு அல்லாமல் சட்ட புத்தகத்திற்கு அமைய நீதிமன்றம் தற்போது தீர்ப்புகளை வழங்கி வருகிறது.
62 லட்சம் மக்களின் ஆணையே நீதிமன்றத்தில் கூட இந்த நிலைமை ஏற்படுத்தியது எனவும் உபுல் குமாரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.