கோடிகளில் பேரம்! உண்மையை உடைத்த மைத்திரி: சிக்கலில் மகிந்த?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பல மில்லியன் ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியாத காரணத்தினால், மகிந்த ராஜபக்சவுக்கு 113 பெரும்பான்மை கிடைக்கவில்லை எனவும் கிடைத்திருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தப் பேச்சு கொழும்பு அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார். எனினும், பெரும்பான்மையில்லாத ஒருவர் பிரதமராக இருக்க முடியாது. எனவே மகிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அழுத்தங்கள் எழுந்தன.

இதற்கமைய, தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டதுடன், கட்சித் தாவல்கள் இடம்பெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய கட்சி உறுப்பினர்களும் மகிந்த பக்கம் தாவினர். ரணில் கட்சியில் இருந்தும் மகிந்தவின் கட்சிக்குள் தாவியவர்கள் உண்டு. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச அதிகளவிலான பணத்தினை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.

எனினும் இது தொடர்பில் அப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவிற்கு மைத்திரிபால சிறிசேன வந்தார்.

நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு இரண்டு மாதங்களாகப்போகின்றன. ஆனால் ஏற்பட்ட குழப்பம் தீர்ந்து போகும் அளவிற்கு இல்லை. நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பொது நிகழ்வு ஒன்றில் பேசிய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிகளில் பேரம் பேசப்பட்டதாகவும், அந்தப் பேரம் பேசுவது தோல்வியில் முடிந்தமையினாலும், மகிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதனாலும் தான் நாட்டில் இவ்வளவு சிக்கல்கள் ஏற்படக்காரணம் எனும் தொனியில் பேசியிருந்தார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல மில்லியன்களை எதிர்பார்த்தனர் என்றும், அதனை மகிந்த ராஜபக்சவினால் கொடுக்க முடியாமல் போனதுமே இந்த நிலைமைக்கு காரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தப் பேச்சு தற்பொழுது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக இருந்து கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் நிகழ்வு தொடர்பில் ஜனாதிபதி எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக அவர்கள் தொடர்பாக இப்போது வரை மௌனமாக இருந்த ஜனாதிபதி இப்பொழுது தான் அது குறித்து வாய் திறந்திருக்கிறார். இலஞ்ச ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்குவந்த ஜனாதிபதி அதற்கு சார்பானவர்களை கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார். இது மிக மோசமான விளைவு. ஆக, ஜனாதிபதி தான் கூறிய இக்கருத்துக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

நாட்டின் முதல் குடிமகன் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் கேட்டதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்ய உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers