கருணா அம்மானிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பில் தமது ஆதரவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள உள்ளுராட்சிசபைகளின் ஆதரவினை மீள்பரிசீலனை செய்யும் நிலையேற்படும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

தமது கட்சியின் தலைவர் கருணா அம்மான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீண்பழிகளை சுமத்தி உரையாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் அவர்கள் பகிரங்க மன்னிப்பினை தமது தலைவரிடம் கோரவேண்டும் எனவும் இல்லாவிட்டால் தாம் வழங்கிய ஆதரவினை மீள்பரிசீலனை செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கையினை தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான து.நவரெட்னராஜா விடுத்துள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் வி.கமலதாஸ், ஊடக பேச்சாளர் எஸ்.வசந்தகுமார் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வவுணதீவில் பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமையினை முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது சுமத்தி உண்மையினை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல் இவ்வாறான வீண்பழி சுமத்தும் நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாகவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Latest Offers

loading...