ஏன் மகிந்த இப்படிச் செய்தார்? எதற்கு இந்தப் பேராசை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மகிந்த ராஜபக்சவை மக்கள் விரும்பாத போதும், அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்காத போதும் ஏன் மகிந்த ராஜபக்ச இந்தப் பதவியினை பெற்றுக் கொண்டார். ஏன் இந்தப் பேரசை என்று மக்கள் கேள்வி எழுப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது, இதன் போது உறுப்பினர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்க,

இன்று நாடாளுமன்றத்தை மதிக்காமல் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் நாடாளுமன்றத்தை கலைத்து, பிரதமரை மாற்றியமைத்து நாட்டின் ஆட்சி பலத்தை கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு நாடாளுமன்றத்தை புறக்கணித்து ஆட்சியை கைப்பற்ற இவர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கே முழுநாடும் எதிர்ப்பினை வெளியிட்டுவருகின்றதே தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் இல்லை.

நாடாளுமன்றம் இல்லாமல் ஒருநாளும் ஆட்சி புரிய முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேவை இல்லை என்றதாலேயே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் பொது தேர்தல்களில் அவருக்கு எதிர்த்து வாக்குபதிவு செய்திருந்தனர்.

அவ்வாறு தேசிய தேர்தல்களில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மக்கள் தனது வாக்கு பலத்தை பிரயோகித்துள்ள நிலையில் மக்களின் அபிப்பிராயத்தை நிராகரிக்க முடியாது.

அவ்வாறே மீண்டும் மகிந்த ராஜபக்சவை மக்கள் எதிர்பார்ப்பார்களானால் எதிர்வரும் தேர்தல்களில் அவருக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க முடியும். ஆனால் அவ்வாறானதொரு தீர்மானத்திற்கு மக்கள் தயாராக இல்லை என்பதையும் மக்களே வெளிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் எதற்காக இவ்வாறு இந்த பதவியினை மகிந்த பெற்றுகொண்டார். எதற்கு இந்தப் பேராசை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் அனைத்துக்கும் மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச இருவரும் நாடாளுமன்றத்தை காலால் உதைத்து தனக்கேற்ற ஆட்சியினை உருவாக்கவே முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

இதேவேளை, நீதிமன்ற தீர்ப்புகள் நாளை அல்லது நாளை மறுதினம் அல்லது வெள்ளிக்கிழமையே வெளிவரும். இதனால் நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்கப்பெற்றவுடன் அடுத்த வாரத்தில் பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers