காரைதீவுப் பிரதேச சபையின் வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

காரைதீவுப் பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை எட்டு ஆதரவு வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

காரைதீவுப் பிரதேச சபையின் 10வது மாதாந்த அமர்வும் வரவுசெலவுத்திட்ட அமர்வும் இன்று சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வரவுசெலவுத்திட்டப் பிரேரணையை உறுப்பினர் ஸ்ரீல.மு.கா உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் முன்மொழிய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.ஜெயராணி வழிமொழிந்துள்ளார்.

வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பான கருத்துக்கள் சகல உறுப்பினர்களாலும் சபையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது உபதவிசாளர் எ.எம்.ஜாகீர் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர். த.தே.கூட்டமைப்பு உறுப்பினர் சபாபதி நேசராசா நடுநிலைவகித்தார்.

மு.கா.உறுப்பினர்களான எம்.இஸ்மாயில் எம்.றனீஸ், த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களான த.மோகனதாஸ். எஸ்.ஜெயராணி, அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஜலீல். சுயேச்சை உறுப்பினரான எம்.பஸ்மீர், ஸ்ரீல.சு.கட்சி உறுப்பினரான மு.காண்டீபன், ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். இறுதியில் தவிசாளர் கி.ஜெயசிறிலின் வாக்கும் ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எட்டு வாக்குகளை பெற்று 2019ஆம் ஆண்டுக்கான காரைதீவுப் பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையிலான சபையின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது.

வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அண்மையில் சகல உறுப்பினர்களின் ஆலோசனை பெறும்முகமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டது. அதில் கணக்காளரும் செயலாளரும் பூரண விளக்கமளித்தனர்.

அங்கு சகல உறுப்பினர்களும் அதிலுள்ள ஒருசில குறைபாடுகளை சுட்டிக்காட்டியதையடுத்து அனைத்தும் திருத்தம் செய்யப்பட்டது. அதனை ஏகமனதாக சகலரும் ஏற்றுக்கொள்வதென்று முடிவானது.

இருந்தபோதிலும் இன்றைய அமர்வில் ஒருசில கணக்கைக் காரணங்காட்டி மேற்படி மூவரும் எதிர்த்துவாக்களித்தமை ஏனைய உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக அவர்கள் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துரையாற்றினர்.

இறுதியில் தவிசாளர் ஜெயசிறில் கூறுகையில், ஆதரிப்பதும் ஜனநாயகம் எதிர்ப்பதும் ஜனநாயகம். ஆனால் முதுகில் குத்துவது ஜனநாயகமல்ல. எதிர்காலத்திலாவது மக்கள் பிரதிநிதிகளாக இயங்குங்கள் என தெரிவித்துள்ளார்.

வரவுசெலவுத்திட்டம் இங்கு சபையில் நிறைவேற்றப்படமுன்பு ஒரு முகநூலில் பதிவிடப்பட்ட கருத்து தொடர்பாக சம்மாந்துறை பொலிஸில் சட்டநடவடிக்கைக்காக முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers