கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் விசேட பேச்சுவார்த்தை!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் அளவில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் கூட்டாக செயற்படவேண்டும்.

இதன் முதற்கட்டமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இதற்கான பேச்சுவார்த்தைகள் அடுத்தவாரம் இடம்பெறும்.

தேசிய கட்சிகளுடன் நாங்கள் உறவு கொண்டாடுகின்றபோது, தமிழ் கட்சிகளுடனான எங்களது உறவில் அடிக்கடி விரிசல்கள் ஏற்படுகின்றன.

நாங்கள் எவ்வளவுதான் நெருக்கமாக நடந்தாலும், பிரச்சினைகளுக்கு தீர்வு விடயத்தில் தமிழ் தரப்புடன் முரண்பாடுகள் ஏற்படுவது சர்வசாதாரணமாக நடந்துவருகின்றன.

இந்நிலையில், தேர்தல்களுக்கு முன்னர் இல்லாவிடினும் தேர்தல்களின் பின்னராவது, மலையக கட்சிகள் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் கூட்டாக செயற்படமுடியுமா? என்பது பற்றி நாங்கள் சிந்திக்கின்ற காலம் வந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.