ரணிலுக்காக சம்பந்தனோடு இணைந்து களமிறங்கிய முக்கிய இருவர்!

Report Print Murali Murali in அரசியல்

ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்குமாறு கோரி நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கை பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவளிக்கலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நாளை முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, குறித்த பிரேரணைக்கும் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளிக்கட்சிகளாக அங்கம் வகித்து வருகின்றன.

எனினும் குறித்த கட்சிகள் அரசியல் ரீதியான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே நிபந்தனையின்றி ரணிலை ஆதரிக்க அந்த கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி நியமித்தார்.

எனினும், ஜனாதிபதியின் செயல் அரசியல் அமைப்புக்கு முரணானது என தெரிவித்து பலரும் குரல்கொடுத்து வருவதுடன், ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே ரணிலை பிரதமராக நியமிக்க கோரி நாளை மறு தினம் ஐக்கிய தேசியக் கட்சியால் நம்பிக்கை தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளமை குறிப்பிடத்தகது.