ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்! பிள்ளையார் சுழிபோட்ட மைத்திரி

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்கள் ஆணையை அப்பட்டமாக மீறியுள்ளதால் வாக்களித்த 62 இலட்சம் பேரும் அவர் மீதான நம்பிக்கையை இழந்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.

எனவே, பொதுத் தேர்தலுக்கு முன் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதற்கு சட்ட ரீதியாக எவ்வித தடையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, திகனையில் நேற்று நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிள்ளையார் சுழிபோட்டார். தனது சுயநல அரசியலுக்காக ‘மெகா’ காட்டிக்கொடுப்பையும் அரங்கேற்றினார்.

இவ்வாறு குறுகிய அரசியல் சிற்றின்பத்துக்காக அனைத்தையும் செய்துவிட்டு, ‘நாட்டின் நலனை கருதியே தீர்மானம் எடுத்தேன்’ என தற்போது கூறிவருவது கோமாளி அரசியலின் உச்சகட்டமாகும்.

அரசியலில் வங்குரோத்து அடைந்தவர்களின் இறுதி ஆயுதம்தான் ‘தேசப்பற்றாகும்’ என்று ஜனாதிபதி சிறிசேன, நாடாளுமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் கம்பீரமாக உரையாற்றியிருந்தார்.

அந்த கூற்று சரியென்பதை அவரது நடத்தைகளே இன்று வெளிச்சம் போட்டு காட்டி நிற்கின்றன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதற்காகவே 62 இலட்சம் பேர் மைத்திரிபால சிறிசேன என்ற பொது வேட்பாளருக்கு வாக்களித்தனர்.

ஆனால், மக்கள் ஆணையை மீறும் வகையில் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை அவர் விடுத்தார். இதன்மூலம் அரசமைப்பையும் அப்பட்டமாக மீறினார்.

தான் செய்ததுதான் சரியென பகிரங்கமாக அறிவித்துவரும் மைத்திரிபால சிறிசேன, தனது அரசியல் முடிவுகள் தொடர்பில் மக்களின் கருத்தறிய வேண்டும்.

அதற்கான சிறந்த வழி ஜனாதிபதி தேர்தலாகும். எனவே, போலி காரணங்களை கூறாது, துணிவிருந்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு பிரகடனத்தை வெளியிடுமாறு சவால் விடுக்கின்றேன்.

இரண்டாவது முறையும் ஜனாதிபதி பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசையால்தான் மஹிந்த அணியுடன் அவர் டீல் போட்டார். நாடாளுமன்றத்தையும் கலைத்தார்.

நாடு தொடர்பில் அவர் துளியும் சிந்திக்கவில்லை. அவ்வாறு சிந்தித்திருந்தால் அப்படியானதொரு முடிவை எடுத்திருக்கமாட்டார்.

அரசியல் குழப்பம் ஏற்பட்ட பின்னர் பெரும்பான்மை ஆதரவுள்ள தரப்புக்கு ஆட்சியமைக்க அனுமதி வழங்கியிருப்பார்.

ஆனால், இழுத்தடிப்பு செய்து வருகிறார். இதன்மூலம் ஜனாதிபதியின் கபட அரசியலை காணக்கூடியதாக உள்ளது. நாடு மீதும் நாட்டு மக்கள் தொடர்பிலும் அவருக்கு உண்மையாகவே பற்று இருக்குமானால் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கை இழந்துள்ள அவர் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்த சிறந்த சந்தர்ப்பமாகவும் இது அமையும். நீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers