அரசியல் குழப்பத்துக்கு மைத்திரியே காரணம்! நழுவுகின்றார் மஹிந்த

Report Print Rakesh in அரசியல்

நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பத்துக்கு நான் காரணமல்ல. இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காரணம்.

பிரதமர் பதவிக்கு என்னை நியமிக்குமாறு மைத்திரியை நான் கோரவில்லை. அவரே என்னை அழைத்து, நான்தான் இந்தப் பதவிக்குப் பொருத்தம் என்று கூறினார் என முன்னாள் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுச் செய்திச் சேவையின் கொழும்பு ஊடகவியலாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

2014ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. எதிரணியில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளராக என்னை எதிர்த்துக் களமிறங்கினார். அவர் வெற்றி பெற்று ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆட்சி நடத்தினார்.

ரணிலின் உண்மை முகத்தை அவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கண்டுகொண்டார். அதனடிப்படையில்தான் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக எங்களுக்கு இரகசியத் தகவலையும் அனுப்பியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் எங்களுக்குப் பெரும்பான்மையை நிரூபித்துத் தருவதாகவும் அவர் கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி வழங்கினார். அதனை நம்பியே நான் பிரதமர் பதவியை ஏற்றேன்.

இந்தப் பதவியை நான் கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. அவரே, நான்தான் இந்தப் பதவிக்குப் பொருத்தம் என்று என்னை நியமித்தார்.

துரதிஷ்டவசமாக நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டிய சூழல் ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. ஆனால், அதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நீதிமன்றத்தை நாடியது. அவர்கள் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளப் பயந்தே நீதிமன்றம் சென்றார்கள்.

நான் பிரதமராகச் செயற்படுவதற்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்தார்கள். நீதிமன்றங்கள் இடைக்காலக் கட்டளையை வழங்கியுள்ளன. நான் அதனை மதிக்கின்றேன். நீதிமன்றங்களின் எத்தகையதொரு தீர்ப்பையும் நான் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவுள்ளேன்.

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும்போது நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத் தேர்தலே தீர்வு என்று நாட்டிலுள்ள சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.

இது எனது தனிப்பட்ட கருத்து. நான் நீதிமன்றங்களுக்கு அறிவுரை கூறவில்லை. நீதிமன்றங்கள் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் அதனை ஏற்றுச் செயற்பட நான் தயாராக இருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.