நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அழுத்தம் கொடுக்கும் மைத்திரி - மகிந்த தரப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

மைத்திரி - மகிந்த கூட்டணியினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் அரசியலமைப்பு விரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தி, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பிரசன்ன ரணதுங்க, நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கான தீர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பிலேயே தங்கியுள்ளது. பொதுத் தேர்தல் நடத்த முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால், நெருக்கடியை எப்போதும் தீர்க்க முடியாது. அது தீரவும் செய்யாது” பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

பியகம தொகுதியின் தெல்கொட நகரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டரீதியானது எனவும் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தால், நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் எனவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு ஒரே தீர்வு உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துவது எனவும், கட்சி ஒன்றின் நலன் குறித்து சிந்திப்பதற்கு பதிலாக பொதுத் தேர்தலை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் அலுவலவகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறிய அவர், உயர் நீதிமன்றத்திடம் சுமூகமான பதிலை எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

“உயர் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் வழக்கத்திற்கு மாறாக உள்ளது. நாடு சீர்குலைவதற்காக நாடாளுமன்றத்தை கலைத்தமை தொடர்பான வழக்கு தீர்ப்பு தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.

வழக்கு தீர்ப்பை துரிதமாக வழக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோருகிறோம் என ஜனாதிபதியிடம் கூறினேன்” என வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பிரதமர் மற்றும் அமைச்சரவை செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையுத்தரவையும் வீரவங்ச விமர்சித்துள்ளார்.

நீதிமன்றம் தொடர்பில் இந்த அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான கருத்துக்கள் எனவும் நீதிமன்றம் இப்படித்தான் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று அழுத்தங்களை கொடுக்க முடியாது எனவும் சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.