மகிந்த ராஜபக்சவின் சகாக்களுக்கு எங்கள் மீது பெரிய ஆத்திரம்! வெளிப்படுத்தும் எம்.பி

Report Print Steephen Steephen in அரசியல்

மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசியல் கனவை அழித்து ஜனநாயகத்திற்காக போராடும் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் இணைந்து கொண்டதாக தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்த ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல்வாதிகளின் ஜனநாயக விரோத செயல்களை தடுக்க முடிந்த காரணத்தினால், அந்த கட்சியின் அரசியல்வாதிகள் தனக்கு எதிராக பகையுணர்வுடன் செயற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்சவின் சகாக்களுக்கு எங்கள் மீது பெரிய ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு குறித்து அவர்களுக்கு எந்த உணர்வுமில்லை. நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவல நிலைமை பற்றி அவர்களுக்கு பிரச்சினையில்லை.

சர்வதேச ரீதியில் எமது நாடு தனிப்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்களுக்கு மனுஷ நாணயக்கார தொடர்பிலான பிரச்சினை மட்டுமே உள்ளது.

இதன் காரணமாகவே எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். சேறுபூச ஆரம்பித்துள்ளனர். ஆங்காங்கே எங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

இவற்றை கண்டு நாங்கள் அஞ்ச போவதில்லை. பிரதமர் கனவை கலைத்து விட்டோம் என்ற காரணத்தினால் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாகும் கனவை கலைத்ததால் எங்கள் மீது அவர்களுக்கு ஆத்திரம். நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்து வழக்குகளை திரும்ப பெற முடியவில்லை.

அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியவில்லை என்பதால், எம் மீது சேறுபூசுகின்றனர். இவை எவற்றுக்கும் நாங்கள் அஞ்சபோவதில்லை.

நீதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுப்போம் எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.