மைத்திரி வீடு நோக்கி செல்ல நேரிடும்!

Report Print Thirumal Thirumal in அரசியல்

தோட்ட தொழிலாளர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தினால் தேயிலையின் ஏற்றுமதி பாரியளவில் பாதிக்கப்படும். அதேநேரத்தில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் பொழுது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என ஜே.வி.பியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

குறித்த சங்கத்தின் ஹட்டன் பிரதான காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஒன்று நாட்டில் இல்லாத நிலையில் நாட்டின் அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமே காணப்படுகின்றது.

அந்தவகையில் ஆயிரம் ரூபாவை நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமாக கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் போராட்டங்களிலும், பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளுக்கும் பொறுப்பு கூறவேண்டிய கடமை ஜனாதிபதியை சார்ந்ததாகும். ஜனாதிபதி தலையிட்டு தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

இல்லையேல் இன்று தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் 70 வீத போராட்டம் எதிர்காலத்தில் நூறு வீதமாகி தேசிய ரீதியிலான போராட்டமாக வெடிக்கும். அதன்போது ஜனாதிபதி வீடு நோக்கி செல்லவும் நேரிடும்.

கடந்த 4ஆம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதியுடன் முடிவடைந்து புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பேச்சுவார்த்தைகள் இன்று டிசம்பர் மாதம் நடுபகுதியை எட்டியுள்ள போதிலும் முறையான ஒரு தீர்வு எட்டப்படவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், அரச தரப்பு இந்த விடயத்தில் ஒரு சரியான தீர்வை கண்டிருந்தால் இன்று பணிபகிஷ்கரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட தேவையில்லை.

ஆயிரம் ரூபாவை நாளொன்றுக்கான அடிப்படை சம்பளமாக கோரிக்கையாக முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று பணிபகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் அரசு ஒன்று இல்லாத நிலையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் அமைச்சர்கள் மற்றும் அமைச்சு அந்தஸ்துள்ள அமைச்சர்களை நிறுவ முடியும் என்றால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பிலும் தலையிட்டு மக்களின் கோரிக்கையான சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இன்று தேயிலை ஏற்றுமதி பாரியளவில் பின்நோக்கியுள்ளது. இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர் ஜனாதிபதி ஆவார். தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும் பொழுது பொருளாதாரத்தில் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

70 வீத போராட்டமாக முன்னெடுக்கப்படும் இந்தநிலையில் 100 வீத போராட்டமாக பாரிமாணம் அடைவதற்கு முன்பு தொழிலாளர்களின் சமபளத்தை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers