வடக்கில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர்

Report Print Steephen Steephen in அரசியல்

வடக்கில் பெற்றோர் சட்டரீதியான முறையில் இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைத்த பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குமார் குணரட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டு குணரட்னம் இதனை கூறியுள்ளார்.

காணாமல் போக செய்யும் வரலாறு இந்த நாட்டில் பல காலமாக இருந்து வந்த ஒன்று. 1971ஆம் ஆண்டு மட்டுமல்ல 88-89 ஆம் ஆண்டுகளிலும் நாட்டில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். 88-89 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கங்களின் தலைவர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

அதேவேளை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் மூலம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. உண்மையான ஜனநாயகத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் அதிகார போட்டிக்கு எதிராக அணித்திரள வேண்டும்.

லலித் குமார் வீரராஜூ மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போய் 7 வருடங்கள் கடந்துள்ளன. இவர்கள் பற்றி ஆட்சியாளர்கள் எவரும் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.

மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார, கொலைகார ஆட்சியை தோற்கடித்து ஜனநாயகத்தை கொண்டு வருவதாக கூறி, ரணில் மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததது. ஆட்சிக்கு வந்து கடந்த மூன்று ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் சம்பந்தமான எந்த நியாயமான விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

பெற்றோர் பல வருடங்களாக வீதியில் இருக்கின்றனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று தேடும் பெற்றோருக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.