ரணிலுக்கு வைக்கப்படும் பொறி! மைத்திரி மகிந்தவின் அஸ்திரம் தயார்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவை அடுத்த பொறியில் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விடாப்பிடி அரசியல் இன்னமும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசியல் மோசமான கட்டத்தை அடைந்து கொண்டிருப்பதாக சர்வதேச நாடுகள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தை மாதத்தில் அரச ஊழியர்களுக்கான ஊதியக் கொடுப்பனவில் சிக்கல் வரும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் மறுபக்கத்தில் எச்சரிக்கையான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இவை அனைத்தையும் அரசியல் தலைவர்கள் கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை என்று கவலை வெளியிட்டிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதற்கிடையில் நாளைய தினம் நாடாளுமன்றம் கூடுகிறது.

ஆனால், நாளைய அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நாடாளுமன்றம் செல்லமாட்டார்கள் என்றும், அனைவரும் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னொருபுறத்தில் ரணில் விக்ரமசிங்க செய்த ஊழல்கள் மற்றும் திருட்டுக்களை தான் அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன் என்றும், அதற்காக விசேட ஆணைக்குழு ஒன்று அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதாக மற்றொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவை பெரும் பொறியில் வீழ்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கின்றன கொழும்பு தகவலறிந்த வட்டாரங்கள்.

தனக்குப் பிடிக்காத ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக ஏற்க முடியாது என்பது மைத்திரியின் திட்டவட்டமான முடிவு. அதேநேரம், ரணிலுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்றும், அதனை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக நிரூபிப்போம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரணில் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிய மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்துகொண்டு அரச நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டதால், ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில், யாதுரிமை எழுத்தாணை உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ் அன்ட் பப்லிஷர்ஸ் குழுமத்தின் (Lake House Printers and Publishers) பங்குதாரர் எனவும் 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகளில் அவரது பெயர் நிறுவனத்தின் 9 ஆவது அதிகூடிய பங்குகள் உடையவராகக் குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் ஊடாக அரச நிறுவனங்களாக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றுக்கு காசோலை புத்தகங்கள், ஊழியர் அடையாள அட்டை, கடனட்டைகள் மற்றும் கணக்கு அட்டைகளை குறித்த நிறுவனம் அச்சிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தனிப்பட்ட ரீதியில் இந்த ஒப்பந்தங்களின் ஊடாக பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க இலாபமீட்டியுள்ளதாக ஷர்மிலா கோனவல தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 91 /1 (இ ) சரத்திற்கு அமைய ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவை விசாரணை செய்து, இது தொடர்பில் யாதுரிமை எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ள மனுதாரர், மனு மீதான விசாரணை நிறைவு பெறும் வரை ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட இடைக்காலத் தடை விதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, அகில விராஜ் காரியவசம், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட ஐவர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணை விரைவில் வெளிவருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை இயங்குவதற்கான இடைக்காலத் தடை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை என்று நீதிமன்றம் தடைகளை விதித்திருக்கும் நிலையில், ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியலில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் இணைந்து எடுக்கும் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது அடுத்த நாட்களில் தெரியும். ஆனால். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்கின்றன ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள்.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு நாளை தெரியும். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டது.

எதுவாயினும் இப்போதைக்கு இந்த அரசியல் குழப்பங்கள் தீர்ந்து போகும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதில் சந்தேகம் இல்லை.