ரணிலுடன் கூட்டமைப்பு அவசர பேச்சு வார்த்தை?

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் முக்கிய பேச்சுவாரத்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், சமகால அரசியல் நெருடிக்கடிகள் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்த சந்திப்பு குறித்த உத்தியோகப்பூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. முன்னதாக இன்று காலை கூட்டமைப்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம்பெறுவதாக இருந்தது.

எவ்வாறாயினும், இன்று காலை நாடாளுமன்ற குழு கூடியதாகவும், கடந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று மாலை ரணிலை சந்தித்து பேசியுள்ளதாகவும் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பிரதமராக ரணிலை நியமிக்க வேண்டும் என கோரி ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் நம்பிக்கை பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

ஏற்கனவே இந்த பிரேரணைக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கப்போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், கூட்டமைப்பு பிரேரணையை ஆதரிப்பது தொடர்பில் மௌனம் காத்து வந்தது.

எனினும், இந்த நம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இந்த பின்னணியில் இன்று மாலை ரணில் விக்ரமசிங்கவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.