ரணிலுக்கு ஏன் ஆதரவு கொடுத்தோம்! சம்பந்தன் தரப்பினர் விளக்கம்- ஒரே நாட்டுக்குள் தீர்வு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன்போது 117 உறுப்பினர்களின் ஆதரவினை ரணில் விக்ரமசிங்க பெற்று தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியானது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவிங்கு வழங்கிய ஆதரவு எதற்கானது என்பது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கியுள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

அரசாங்கத்தின் பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தோம்.

இந்த முடிவின்போது எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரையாடியிருந்தோம்.

ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இது பற்றிக் கலந்துரையாடினோம். இன்று ரணில் விக்ரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்போம் தெளிவாகக் கூறியிருந்தார் என்றும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்த நாடாளுமன்றமானது சட்டவிரோதமானது என்றும் மகிந்த தரப்பினர் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers