கூட்டமைப்பின் 14 வாக்குகளும் இல்லை என்றால்? ரணிலின் நிலை...

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை பலம் கிடையாது என்பது இன்றைய தினம் நிரூபணமாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து 117 பேர் வாக்களித்துள்ள போதிலும், இதில் 14 வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணையில் வாக்களித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறிய போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளப் போவதில்லை எனக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 வாக்குகளும் இதில் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே அரசாங்கமொன்றை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படும் ஆசனங்களின் எண்ணிக்கை வெறும் 103 மட்டுமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலம் உண்டு என ஐக்கிய தேசியக் கட்சி செய்து வரும் பிரச்சாரம் முற்று முழுதாக பொய் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.