அமெரிக்கா மீது கடும் கோபமடையும் மகிந்த தரப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

அமெரிக்கத் தூதுவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுவருகின்றார் என மகிந்த ராஜபக்ச தரப்பினர் கடுமையான அதிருப்தியினை வெளியிட்டுவருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பங்களினால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துவருவதாக அமெரிக்கத் தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மகிந்த ராஜபக்ச தரப்பினர் கடும் அதிருப்தியினை வெளியிட்டுவருகின்றனர். குறிப்பாக இது தொடர்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன,

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உள்ளதாக அமெரிக்கத் துதுவர் கூறியிருப்பது தவறானது. இதுபற்றிய விளக்கத்தைப் பெற அவர் மத்திய வங்கி ஆளுனரை சந்திக்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதார நிலை பற்றி சில சக்திகள், தவறான தகவல்களை அமெரிக்கத் தூதுவரிடம் கூறியுள்ளன. அவர் தலதா மாளிகையில் ஊடகங்களிடம் வெளியிட்ட கருத்து தவறானது.

தற்போதைய நாணயப் பெறுமதியின் வீழ்ச்சிக்கு அரசியல் நெருக்கடியே காரணம் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாகவும், என்றும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் பதவியில் இருந்த போதே ஏற்பட்டிருந்தன. ரணில் தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு ரணிலிடமே உண்டு.

நாட்டில் ஏற்பட்ட பெரும் நெருக்கடிகளின் மத்தியில் தான் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். நாட்டின் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டும் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுமே மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியில் அமர்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அமெரிக்கத் தூதுவர் நாட்டின் பொருளாதாரம் பற்றி தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்று மகிந்தவுக்கு நெருக்கமான- மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.