சூழ்ச்சிகளின் பின்னணியில் ரணில்! முதன்மை நடிகர்கள் மைத்திரி- மகிந்த

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இப்போது இருக்கும் சூழ்ச்சியின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான் இருக்கிறார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 117 வாக்குகளால் ரணில் வி்க்ரமசிங்க தன்னுடைய பெரும்பான்மையை நிரூபித்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அனுரகுமார,

பிரதமர் ஆசனத்தில் மகிந்தவை அமர்த்தவோ அல்லது ரணிலை அமர்த்த வேண்டும் என்பதோ எமது பிரச்சினை அல்ல. அரசியல் அமைப்பினை பாதுகாக்க வேண்டும் என்பதே எமது ஒரே நோக்கம் அதற்காகவே நாம் போராடினோம்.

நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தமை, நாடாளுமன்றத்தை கலைத்தமை, அமைச்சு பதவிகளை வழங்குதல், நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதும் தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருக்க முயற்சித்தல், அமைச்சர்களை நியமித்தல் என்பன அந்த சூழ்ச்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான முயற்சியே. எவ்வாறாயினும் சூழ்ச்சியை தோற்கடிக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம்.

நாங்கள் அரசியல் இயக்கம் என்ற வகையில் ஏதேனும் நிலைப்பாட்டை மேற்கொள்வோம். ஜனநாயகத்திற்காக நாங்கள் அந்த நிலைப்பாட்டை எடுப்போம். நாங்கள் அதிலிருந்து மாறப் போவதில்லை. அடுத்த அரசாங்கம் அமையுமாக இருந்தால் அதில் பிரதமர் யார் என்பது எமக்கு தேவையில்லை.

யார் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் மாற்ற முடியாது. ஆசனத்தில் அமர்ந்த நேரம் முதல் எவ்வாறு பணத்தை தேடுவது என்பதுதான் அவர்களின் எண்ணங்களாக இருக்கும். அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார முறைமையில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. இதனால் எந்த முறையில் பார்த்தாலும் அந்த ஆசனத்தில் அமர்ந்தாலும் அது எங்களுக்கு தேவைப்படாதது.

நாங்கள் அரசியல் நிலைப்பாடொன்றில் இருக்கின்றோம். சூழ்ச்சியை தோற்கடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்படுகின்றோம். இதற்கு மேல் எமக்கு பிரதமர் ஆசனத்தில் யார் அமர்ந்தாலும் தேவையில்லை.

ரணில் அமர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவதில்லை. இதனால் இன்றைய தினம் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணை எமக்கு தேவைப்படாதது. என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

ஒக்டோபர் புரட்சியின் முதன்மை நடிகர்கள் மைத்திரி -மகிந்தவாக இருக்கலாம் ஆனால் சூழ்ச்சியின் பின்னணிக்கு ரணில் விக்ரமசிங்கவே காரணம் என்றார்.

இதேவேளை இன்று நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு ரணில் தனது பெரும்பான்மையை நிரூபித்திருக்கும் சூழ்நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது மகிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது இயங்கும் நாடாளுமன்றம் சட்டவிரோதமானது என்றும், அவ்வாறு சட்டவிரோத நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் சட்டவிரோதமானவை என்றும் மகிந்த தரப்பினர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.