சு.கவின் ஒன்பது எம்.பிக்கள் ஐ.தே.கவிற்கு ஆதரவு

Report Print Rakesh in அரசியல்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான அரசியல்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

சு.கவின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்துள்ள மேற்படி எம்.பிக்கள், ஐ.தே.க தலைமையில் அமையவுள்ள புதிய ஆட்சியில் பங்காளிகளாக சங்கமிக்கவுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து தமது நிலைப்பாட்டை குறித்த உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி, "ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைக்கமாட்டேன். தனியாட்சி அமைப்பதற்குரிய பெரும்பான்மையை ஐக்கிய தேசிய முன்னணி நிரூபித்துள்ளது.

எனவே, தனிப்பட்ட ரீதியில் நீங்கள் எடுக்கும் அரசியல் முடிவுக்கு தடையாக இருக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி சொய்சா, லசந்த அழகியவண்ண, பைசர் முஸ்தப்பா, காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், லக்ஷ்மன் செனவிரத்ன, வீரகுமார திஸாநாயக்க உட்பட மேலும் சிலரே ஜனாதிபதியை நேற்றிரவு தனிப்பட்ட ரீதியில் சந்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ – அவரது அமைச்சர்கள், பிரதமர் மற்றும் அமைச்சர்களாக செயற்படமேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான பின் தெற்குஅரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளதாக தெரியவருகிறது.

இதன் ஓர் அங்கமாக சு.க உறுப்பினர்கள் ஐ.தே.கவை ஆதரிக்கும் முடிவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தனியாட்சி அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆகவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுகளின் எண்ணிக்கை 40ஐ விஞ்சுதலாகாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அரசொன்று அமையும் பட்சத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகளின் எண்ணிக்கையை நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் 45 ஆக அதிகரித்து கொள்ள முடியும்.

எனவே, தேசிய அரசு அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.