சுமந்திரனுக்கு நன்றி! ரணிலுக்கும் வெற்றி கிடைத்து விட்டது

Report Print Navoj in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணான விதத்தில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமை அரசியலமைப்பிற்கு முரணானது என நேற்று கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான விடயமானது நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் தீர்ப்பு வெளியாகியிருக்கின்றது.

நவம்பர் மாதம் 13ஆம் திகதி இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சுமார் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் முதலாவது வழக்கினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தாக்கல் செய்திருந்தார். அதன் தீர்ப்பு வெளிவந்துள்ளது.

இது முதல் தடவையாக 03 நீதிபதிகளின் முன்னிலையில் கேட்கப்பட்டது. நிமல் ஸ்ரீபால டீ சில்வாவின் கோரிக்கைக்கு அமைவாக 07 நீதிபதிகள் முன்னிலையில் கேட்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தீர்ப்பு முழுமனதாக நிறைகுழாம் தீர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு முரணான விதத்தில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமாக இருந்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு அது ஜனாதிபதியால் பிரதம நீதியரசருக்கு அனுப்பப்பட்டு அவருடைய நெறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகளை ஜனதிபதி பின்பற்றவில்லை. உண்மையில் இதற்கு ஜனாதிபதி மட்டும் நேரடியாக பொறுப்புக்கூற முடியாது. பலரால் ஜனாதிபதி பிழையாக வழிநடத்தப்பட்டு இருக்கின்றார் என்றே கூற வேண்டும்.

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை தலைவராக கொண்ட குழுதான் இந்த 19ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது. ஆனால் அதே விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதிக்கு பிழையான வழிகாட்டலை செய்திருப்பதென்பது ஒரு வருந்தத்தக்க விடயமாகும்.

எதுவாயினும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களுக்கு வெளிவந்திருக்கும் தீர்ப்போடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியது தான் இந்த நாட்டின் பால் உண்மையான பற்றுள்ளவர்கள் என சொல்லக் கூடிய அரசியலாளர்கள் செய்ய வேண்டிய வேலை.

இது தொடர்பாக யாரும் எவ்விதமான அவமானங்களையோ அல்லது தோல்வியையோ பெற்றதாக நினைக்க வேண்டியதில்லை. மக்கள் 05 ஆண்டுகளுக்கான ஆணையை கொடுத்திருக்கின்றார்கள்.

அவ்வப்போது ஏற்படுகின்ற சிக்கல்களுக்கு சரியான முறையில் தீர்வு கண்டு மக்களால் தரப்பட்ட ஆணைக்கேற்ப செயற்படுவது தான் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கடமையாக இருக்கும்.

எனவே இனிமேல் நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் சட்டத்தின் ஓட்டைகளை கண்டுபிடிப்பது, தமிழ், ஆங்கில, சிங்கள பதிப்புகளில் உள்ள வித்தியாசங்களை வைத்து வெற்றி காண்பது பிழையான வழி என தீர்மானிக்கப்பட்டு விட்டது.

இந்த வழக்கு நடவடிக்கைகளில் எமது உறுப்பினர் சுமந்திரன் மும்முரமாக ஈடுபட்டார். உண்மையில் நாம் உட்பட முழு நாடும் அவருக்கும் அவருடைய சிரேஸ்ட சட்டத்தரணி கனகீஸ்வரனுக்கும் நன்றி மற்றும் பாராட்டுதலை வழங்க வேண்டும். இதேவேளை ரணிலுக்கும் வெற்றி கிடைத்து விட்டது என தெரிவித்துள்ளார்.

Latest Offers