ஜனாதிபதி இதனை செய்தாலும் அரசியலமைப்புச் சட்டம் மீறப்படும்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி, பொதுத் தேர்தலுக்கு செல்ல முயற்சித்தாலும் அதன் மூலமும் அரசியலமைப்புச் சட்டம் மீறப்படும் என சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பொன்றில் குமாரப்பெரும இதனை கூறியுள்ளார். அதில் மேலும்,

உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைக்க முடிந்த சந்தர்ப்பத்தை சுட்டிக்காட்டி தீர்ப்பை வழங்கியுள்ளதால், அதனை மீறிய செயற்பாடுகள் மூலம் நாடாளுமன்றத்தை கலைக்க முயற்சிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.

ஜனாதிபதி தன்னிடம் இருந்த அனைத்து துரும்புகளையும் பயன்படுத்தி முடித்து விட்டார்.

இந்த நிலையில், ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்களின் அடுத்த வேலைத்திட்டமாக தேர்தலை கோரி சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது குறித்து புதிய கதைகளை பேச ஆரம்பித்துள்ளனர்.

எந்த காரணத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது தெளிவில்லாத நிலைமையாக இருக்கின்றது.

1982ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு சம்பந்தமாக தவறான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் தேர்தலை நடத்தவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியும் என்ற விடயம் நாட்டில் பிரபலமான நிலைப்பாடாக இருந்து வருகிறது.

எனினும் 1982ஆம் ஆண்டு நடந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு காரணம் அவ்வாறான விடயமல்ல. அரசியலமைப்பு சட்டத்தின் 161(இ) ஷரத்திற்கு 4ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதியில் இருந்து நான்கு ஆண்டுகள் வரையாகும். அதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஒழிய அதன் பதவிக்காலம் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை தொடரும் என திருத்தம் செய்யப்பட்டது.

இதனடிப்படையில், நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுக்கு கொண்டு வர இணங்குகிறீர்களா? இல்லையா? என்ற அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சட்டத்திற்கு அமைய கலைக்கும் சந்தர்ப்பம் தொடர்பாகவே உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியான பின்னர் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் யோசனை ஒன்றை நிறைவேற்றினால் மட்டுமே நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் கலைக்கலாம்.

இதன் காரணமாக தற்போதுள்ள நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதியால் கலைக்க முடியாது.

அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமாயின் அரசியலமைப்பு சட்டத்தின் 70(1) ஷரத்தில் திருத்தம் செய்து, அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றி, சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும்.

இப்படியான திருத்தத்தை மேற்கொள்ளாது, சர்வஜன வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது. அப்படி செய்தால், அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என உபுல் குமாரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.