நாட்டு மக்களுக்கு இது புதிதான விடயமல்ல: டளஸ் அழகப்பெரும

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தல் நடத்துவதை நீதிமன்றம் நிறுத்தினாலும் தேர்தலுக்கு செல்ல பல வழிகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தலுக்கு செல்ல பல வழிகள் உள்ளன. அரசியல் தலைவர்கள் என்ற வகையில் நாங்கள் அதற்கு தலைமைத்துவத்தை வழங்குவோம்.

பல ஜனநாயக வழிகள் இருக்கின்றன. தேர்தலை கோரி நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக எங்களை அரசியலமைப்பு சூழ்ச்சிகாரர்கள் என்று கூறினர்.

அரசியலமைப்புக்கு எதிராக அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக கூறினர். உலகில் எந்த நாட்டில் அரசியலமைப்பு சூழ்ச்சியில் ஈடுபட்டவர்கள் தேர்தலை கோரியுள்ளனர் என்று கூறுங்கள்.

எந்த சர்வாதிகாரி தேர்தலுக்காக போராடியுள்ளார். ஏதாவது ஒரு உதாரணம் இருந்தால் கூறுங்கள். தேர்தல் அவசியமில்லை என்று நீதிமன்றத்திற்கு சென்ற பலரை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால், ஒரு நபர் இருக்கின்றார். தேர்தல் தேவையில்லை என்ற தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் ராஜன் ஹூல் நீதிமன்றத்திற்கு சென்றார்.

ஏன் அவர் அப்படி சென்றார் என்பதை எங்களால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டரை வருடங்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாத நிலையில், நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம்.

ஒரு வருடமும் மூன்று மாதங்களுக்கு இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த வருடம் மார்ச் மாதம் வழக்கு விசாரித்து முடிக்கப்பட்டது.

இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. ஜனநாயக விரும்பிகள் எவரும் அது பற்றி இதுவரை எதனையும் பேசவில்லை.

அந்த நேரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த ஆணையாளர் நீதிமன்றத்திற்கு செல்ல தீர்மானிக்கவில்லை. நீதிமன்றம் தீர்வு கிடைக்கும் இடமாக காணவில்லை.

மூன்று மாகாணசபைகள் கலைந்து இன்றுடன் ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்துள்ளன. மேலும் மூன்று மாகாணசபைகள் கலைந்து நான்கு மாதங்கள் கடந்துள்ளன.

தேர்தல் தாகத்தில் முழு நாடும் தவிக்கின்றது. பொதுத் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்ற இந்த தேர்தல் ஆணையாளர், அப்போது மக்களுக்கு சார்பில் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை.

தேர்தல் ஊடாக மக்களின் கருத்தை அறிவதன் மூலம் ஜனநாயகம் காக்கப்படும். 1948ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 15 பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் தெரிவான 5 அரசாங்கங்கள், பதவிக்காலம் முடியும் முன்னர் தேர்தலுக்கு சென்றன. அல்லது செல்ல நேர்ந்தது.

இதனால், நாட்டு மக்களுக்கு இது புதிதான விடயமல்ல. அது தவறும் அல்ல. நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருந்து வருகிறோம் எனவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.