ஜனாதிபதியை கொலை செய்யும் சதி! சாட்சியங்கள் இல்லையென பொலிஸார் தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பான கடந்த மூன்று மாதங்களாக விசாரணைகளை நடத்திய போதிலும் அது சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய எவ்வித சாட்சியங்களும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

ரொய்டர் செய்தி சேவையிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் வசித்து வரும் நாமல் குமார என்பவர், ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் இருப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரது தேவைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறியிருந்தார்.

நாமல் குமாரவின் இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் எதிர்பாராத அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினார். இது நாட்டை மிகப் பெரிய அரசியல் நெருக்கடிக்கும், ஸ்திரமற்ற நிலைமைக்கும் தள்ள காரணமாக அமைந்தது.