அரசியலமைப்பு என்பது விளையாட்டு பொருளல்ல!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் எடுத்த தீர்மானத்தை உயர் நீதிமன்றம் செல்லுப்படியற்றது என அறிவித்தன் மூலம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை எவருக்கும் தேவையான வகையில் விளையாட்டு பொருளாக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையக செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஜனாதிபதி தனக்கு விருப்பமான வகையில் அரசாங்கத்தை நியமித்தார். அது பற்றி பேசக் கூடிய பிரதான நிறுவனமான நாடாளுமன்றத்தை மூடி, சூழ்ச்சியில் ஈடுபடும் சந்தர்ப்பத்திலேயே நாங்கள் இதனை கட்டாயம் தோற்கடிப்போம் என்று கூறினோம்.

கூறியது போல் நாங்கள் அதனை தோற்கடித்தோம். வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது.

இந்த வெற்றியானது ஐக்கிய தேசியக்கட்சிக்கோ ரணில் விக்ரமசிங்கவுக்கோ கிடைத்த வெற்றியல்ல. ஜனநாயகத்தின் வெற்றி. 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்தது.

தீர்ப்பை வழங்கிய 7 நீதியரசர்கள் அமர்வு ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க எடுத்த தீர்மானம் காரணமாக மக்களின் வாக்குரிமை தொடர்பான அரசியலமைப்புச் சட்டத்தின் 12 (1) ஷரத்து மீறப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை ஒரு நபரின் தனிப்பட்ட தேவைக்காக உரிய காலத்திற்கு முன்னர் நீக்க முடியாது.

அதேபோல் அரசியலமைப்புச் சட்டத்தின் 12(1) ஷரத்திற்கு அமைய அனைவரையும் சமமான கருத வேண்டும். எவருக்கும் இன்னுமொருவரின் உரிமைகளை ஒரு தலைப்பட்சமான முறையில் மீற முடியாது என நீதியரசர்கள் அமர்வு சுட்டிக்காட்டியதாகவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.