ரணிலை அலரி மாளிகைக்கு சென்று சந்தித்த பொலிஸ் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் இன்று அலரி மாளிகைக்கு சென்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வித்தியாலங்கார மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உட்பட சில அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், இரவு இந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மகிந்த ராஜபக்சவை சந்தித்திருந்தது.

சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக இந்த அதிகாரிகள், மகிந்த ராஜபக்சவிடம் கூறியிருந்தனர்.

உயர் நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பை அறிவித்த பின்னர், காணப்பட்ட அரசியல் சூழ்நிலையில், ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்க தயாராக வருவதாக செய்திகள் வெளியாகின.

இன்று அதிகாலை இந்த செய்தி சற்று உறுதியானதை அடுத்து பொலிஸ் அதிகாரிகள் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பொலிஸ் அதிகாரிகளின் உடை மீண்டும் மாறியுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தில் கேலியாக பேசப்படுவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான அதிகாரிகள் சுயாதீன பொலிஸ் சேவைக்கும் பெரும் தடையாக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த அதிகாரிகளை தனிப்பட்ட ரீதியில் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.