பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு

Report Print Suman Suman in அரசியல்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றன.

விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர் வே.வசந்தரூபன் தெரிவிக்கும்போது,

குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு.

ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் உட்பட பலர் இதில் குறைகள் தொடர்பில் எம்மிடம் சுட்டிக்காட்டினார்கள்.

எனவேதான் நாம் மக்களின் விருப்பத்திற்கு அமைவாக அவர்களுக்கு நன்மை ஏற்படுத்தாத இந்த வரவு செலவு திட்டத்தை அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று எதிர்த்த வாக்களித்து தோற்கடித்துள்ளோம். இதில் எவ்வித கட்சி நலனும் இல்லை மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.