50 நாட்களாக நீடித்த அரசியல் நெருக்கடிக்கு நாளையுடன் முடிவு?

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவை அவசரமாக பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததை அடுத் நாட்டில் பெரும் அரசியல் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு, பிரதமர் மற்றும் அமைச்சரவை செயற்பட மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவை இரத்து செய்யுமாறு கோரி மகிந்த ராஜபக்ச தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்ததுடன் ஜனவரி மாதம் மனுவை விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் காரணமாக மைத்திரி - மகிந்த தரப்புக்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியாது பின்வாங்க நேரிட்டுள்ளது.

தொடர்ந்தும் அடம்பிடித்தால், நாட்டின் நிலைமை மோசமாகும் என்ற காரணத்தினால், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை நாளைய தினம் இராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

இதன் பின்னர் திங்கட்கிழமைக்குள் ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை நியமிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 50 நாட்களாக நாட்டில் நிலவி வரும் ஸ்திரமற்ற அரசியல் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் அடுத்த வாரத்தில் இருந்து நாட்டின் நிலைமை வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதவியேற்கும் அரசாங்கம் அடுத்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

இதன் பின்னரே அரச செலவினங்கள் உட்பட நாட்டின் செலவுகளுக்கான நிதியை ஒதுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.