ரணில் - மைத்திரி அவசரமாக தொலைபேசியில் உரையாடல்!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் அவசர உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் பத்து நிமிடங்கள் வரையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதன் காரணமாக பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மனுக்கள் மீதான தீர்ப்பு நேற்று வெளியாகியிருந்தன.

ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு முரணானது என ஏழு பேர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து பிரதமராக ரணிலை நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர்களும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று இரவு ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையில் மூடிய அறையில் இரகசிய சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், ரணிலை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், குறித்த இருவருக்கும் இடையில் இந்த அவசர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers