நெருக்கடி நிலையிலும் மகிந்த ராஜபக்ச செய்த சாதனை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த ஆட்சிக் கவிழ்ப்பு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையை எட்டியிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்துள்ள சூழ்நிலையில் கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக நீடித்திருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூட்டாட்சி முடிவுக்கு வந்ததாகவும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அறிவித்துவிட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி தொடங்கிய அரசியல் குழப்பம், நாடாளுமன்றக் கலைப்பு, நீதிமன்றத்தடைகள் என்று பெரும் நெருக்கடியை நாடு சந்தித்திருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைப்பதாக வெளியிட்ட வர்த்தமானியானது அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தவறு என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன்படி, அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரி, மகிந்த இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல்கள், ரணில் மைத்திரிக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை என்பனவற்றை அடுத்து நாட்டில் நீடித்த அரசியல் குழப்பத்திற்கு முடிவுகிட்டுகிறது.

ஆனால், இலங்கை வரலாற்றில் ஐம்பது நாட்கள் பிரதமராக இருந்த ஒரே தலைவர் மகிந்த ராஜபக்ச என்னும் சாதனையை படைத்திருக்கிறார் என்றும் அரசியல் தரப்பினர் கிண்டலாக தெரிவித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக அமைச்சராக, சந்திரிகா அம்மையார் காலத்தில் பிரதமராக பின்னர், ஜனாதிபதியாக இருமுறை இருந்து, தேர்தலில் தோற்று, பின்னர் பொதுத் தேர்தல் மூலமாக நாடாளுமன்றம் சென்று, இடையில் குறுகிய கால பிரதமராக இருந்து நீதிமன்றத்தடையையடுத்து பதவி விலகுகிறார்.

நாட்டில் குறுகிய கால பிரதமராக இருந்தார் என்பது மகிந்தவின் வரலாற்றில் பொறிக்கப்படும் என்று விமர்சிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

எதுவாயினும், இலங்கை வரலாற்றில் இரண்டு முறை பிரதமராகவும், இரண்டு முறை ஜனாதிபதியாகவும் இருந்த பெருமையும் மகிந்த ராஜபக்சவை சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.