மகிந்த எடுத்துள்ள முடிவு! கூட்டமைப்பினருக்கும், சம்பந்தனுக்கும் ஏற்படும் இழப்பு!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகுவார் என்று வெளியாகியுள்ள தகவலால் கொழும்பு அரசியலில் நீடித்திருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் நிலையிலிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த முடிவு, ஐம்பது நாட்களாக இலங்கை அரசியலைப் புரட்டிப்போட்டது. உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசத்திலும் இலங்கை அரசியல் சிக்கல் குறித்து அதிகளவில் பேசப்பட்டன.

விரைந்து நாட்டின் சிக்கல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்க்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தியிருந்தன. அதேபோன்று உள்நாட்டிலும் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதியிடம் இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு மட்டத்திலும் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

ஆனாலும், பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை தான் ஒருபோதும் பதவியில் அமர்த்த மாட்டேன் என்று மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக திரும்பத் திரும்ப குறிப்பிட்டும் வந்தார்.

எனினும், நீதிமன்றம் மைத்திரியின் அதிகாரம் தொடர்பாக தெளிவான ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறது. மேலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கு விதிக்கப்பட்ட தடையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகுவார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிக்கும், மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச மைத்திரியிடம் சொன்னதாக சில தகவல்களை மைத்திரிபால தெரிவித்திருக்கிறார்.

“மகிந்த ராஜபக்ச இன்று காலை என்னை சந்தித்து இந்த நெருக்கடி நிலைமை தொடரவிட்டு என்னை மேலும் சிக்கலுக்குள்ளாக்க விரும்பவில்லையென தெரிவித்து பதவி விலகுவதாக சொன்னார். நாங்கள் வேறல்ல, எதிர்க்கட்சியில் எங்களது கட்சி உட்காரும் என்றும் சொன்னார்.” என்று மைத்திரி சொல்லியிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவின் இந்தப் பதிலின் விளக்கம், ஜனாதிபதியாக மைத்திரிபால தொடரும் அதேவேளை, பிரதமராக ரணில் விக்ரமசிங்க அல்லது அவரது கட்சியில் எவர் பிரதமராக இருந்தாலும் நாங்கள், மகிந்த தலைமையிலான அணியினர் எதிர் கட்சியில் அமர்வோம் என்பது பொருள்.

ஏற்கனவே பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர்வது தொடர்பிலான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இதன் மூலமாக 117 வாக்குகளால் தன்னுடைய பெரும்பான்மையை ரணில் காட்டியிருக்கிறார்.

ஆக, கூட்டமைப்பினர் ரணிலுக்கு தெரிவித்த ஆதரவினை வைத்துக் கொண்டு, ரணிலின் ஐக்கிய தேசிய முன்னணியில் பங்காளியாக கூட்டமைப்பு இருக்கிறது. எனவே எதிர் கட்சிப் பதவியையும், எதிர்க் கட்சி அந்தஸ்தையும் மகிந்த ராஜபக்ச தரப்பினர் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நாட்டில் நீடித்த அரசியல் குழப்பம் நிறைவு பெறும் நிலை ஏற்படும் போது சமரசங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

மகிந்த ராஜபக்ச எதிர்க் கட்சி அந்தஸ்த்தை கோரினால், குழப்பங்கள் தீர்ந்து நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட கூட்டமைப்பினர் சரியான முடிவுகளை எடுப்பார்கள் என்று கருத முடியும்.

ஏனெனில், நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவே தாம் போராடுவதாகவும், அதனால் தான் ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூட்டமைப்பினர் வெளிப்படையாக அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.