மைத்திரியின் புதிய அறிவிப்பும்! மகிந்தவின் அடுத்த திட்டமும்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாராவது விரும்பினால் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாகவும், மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்தும் நெருக்கடியை ஏற்படுத்த தான் விரும்பவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச நேரடியாகவே மைத்திரியிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி ஏற்படுகிறது என்கின்றன கொழும்பு ஊடகங்கள். இதற்கிடையில், பிரதமராக ரணில் நாளை மறுநாள் பதவிப்பிரமாணம் செய்து கொள்வார் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாராவது விரும்பினால் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் என ஜனாதிபதி கூறியுள்ளார் எனவும், அவ்வாறு சேர்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க, தான் ஒருபோதும் தயாரில்லையெனவும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 23 உறுப்பினர்களும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ச குழுவுடன் சேர்ந்து 95 உறுப்பினர்களும் எதிர்கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் லக்ஷ்மன் யாபா எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய எதிர்க் கட்சி அந்தஸ்த்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.