மைத்திரியின் வெள்ளிப் புரட்சி நிறைவு....!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த அரசியல் மாற்றத்தை அவரே முடிவுக்குக் கொண்டுவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி மைத்திரிபால சிறிசேன யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கினார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது ஒரு அதிர்ச்சி என்றால், மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தது பேரதிர்ச்சி கொடுத்தது.

மகிந்த ராஜபக்சவை எதிர்த்து ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக 2015ம் ஆண்டு களமிறங்கிய மைத்திரி, ஊழல்வாதிகள் என்று மகிந்த தரப்பினரை விமர்சித்தார். அப்படி செயற்பட்ட மைத்திரி, திடீரென்று மீண்டும் மகிந்த ராஜபக்சவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது இலங்கையர்களை பதற்றமடையச் செய்தது.

இந்நிலையில், தொடர்ந்தும் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. ஒக்டோபர் 26ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பழைய பிரதமர் ரணிலை மாற்றி பழைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக்கினார்.

எனினும் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவினால் போதியளவு பெரும்பான்மையை காட்ட முடியாமல் போக, அடுத்து வந்த நவம்பர் 9ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக வர்த்தமானியை வெளியிட்டார் மைத்திரிபால.

இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு மேலும் வலுவடைந்ததோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு முரணானது என்று நீதிமன்றத்தை நாடினர் எதிர் கட்சியினர்.

ஆனால், அடுத்தடுத்து வரும் வெள்ளிக் கிழமைகளில் இன்று ஜனாதிபதி என்ன அறிவிப்பை வெளியிடுவாரோ என்று எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது மட்டுமல்ல, வெள்ளிப் புரட்சி செய்யும் நாயகன் மைத்திரி என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக பேசப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வந்தார்.

இந்நிலையில், நீதிமன்றம் நாடாளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று வழங்கிய தீர்ப்பும், மகிந்தவின் அமைச்சரவைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை அடுத்தும், மகிந்த பதவி விலகுகிறார்.

அதாவது, ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை தொடங்கிய பிரச்சினை நவம்பர் 9ம் திகதி உச்சத்தைத் தொட்டு, டிசம்பர் 14ஆம் திகதி ஒரு முடிவுக்கு வந்து நிற்கின்றன. இதன் மூலமாக வெள்ளியில் தொடக்கிய பிரச்சினையை வெள்ளியில் மைத்திரி முடிக்கிறார் என்று குறிப்பிடுகின்றனர் இணையவாசிகள்.