வேலணை பிரதேச சபை உறுப்பினரின் விசேட கோரிக்கை

Report Print Sumi in அரசியல்

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கடைத் தொகுதிகளை மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் வேலணை பிரதேச சபையின் மாதாந்த அர்வு தவிசாளர் கருணாகர குருமூர்த்தி தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வேலணை பிரதேசத்தின் நகரமாக வங்களாவடி பகுதி காணப்படுகின்றது. ஆனால் இதன் அபிவிருத்தி என்பது மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.

ஒரு பிரதேச சபை என்பது அந்தப் பிரதேசத்தினதும் மக்களதும் அபிவிருத்தியை மையமாக கொண்டதொன்றாகவே காணப்படுகின்றது.

அந்தவகையில் வேலணை பிரதேசத்தின் நகரமாக காணப்படும் வங்களாவடி பகுதியை நவீனப்படுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது பிரதேச சபையின் கடமையாகும்.

எமது பிரதேச சபைக்குரிய கடைகள் பல தனி நபர்களுக்கு கடந்த காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன.

அவற்றுள் அநேகமான கடைகள் பாழடைந்து காணப்படுகின்றன. இவ்வாறு பாழடைந்து காணப்படும் கடைகளால் நகர் பகுதி பொலிவிழந்ததாக காணப்படுகின்றது.

அந்தவகையில் எமது பிரதேசத்தின் நகரப்பகுதியை அபிவிருத்தி செய்யும் முகமாக அதன் முதற்கட்டமாக குறித்த கடைகளை புதுப்பித்து அதை நவீன கடைத் தொகுதிகளாக மாற்றி அமைப்பதுடன் அக்கடைகளை ஏற்கனவே சபையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களுக்கு மீள் ஒப்பந்தம் மூலமோ அல்லது புதிய ஒப்பந்தம் மூலமோ வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் நகரை அபிவிருத்தி செய்வதுடன் சபையின் வருமானத்தையும் இதனூடாக அதிகரிக்க முடியும்.

யாழ். மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களை எடுத்துக்கொண்டால் பல உள்ளூராட்சி மன்றங்கள் நவீன கட்டட வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.

அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எமது பிரதேசத்திலும் ஏற்படுத்த மத்திய அரசுடன் நாம் உடன்பாடுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் நகரை அபிவிருத்தி செய்ய தற்போதைய எமது இந்த சபையின் ஆட்சிக் காலத்தில் முழுமையான நடவடிக்கைகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கேற்றவகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக வேலணையின் நகர் பகுதியான வங்களாவடி பகுதியின் கடைத் தொகுதிகளை முதற் கட்டமாக புனரமைத்து அவற்றை மீள் ஒப்பந்தம் செய்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இச்சபையில் ஒரு பிரேரணையாக முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.